விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பினால் காணாமல் போகும் குளம்

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பினால் காணாமல் போகும் குளம்
X

ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள வண்ணாங்குளம்

கீழ்பெரும்பாக்கம் அருகே இருக்கும் வண்ணான்குளம் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றசாட்டு

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போவதற்கு முன் குளத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்டது கீழ்பெரும்பாக்கம், இப் பகுதியில் வண்ணான் குளம் என்று பெயர் பெற்ற குளம் ஒன்று உள்ளது. இது இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காகவும் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வெட்டப்பட்டு உள்ளது.

இந்த குளம் கீழ்பெரும்பாக்கம் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள காகுப்பம், எருமனந்தாங்கல், பொய்யப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியதோடு விழுப்புரம் நகருக்கு செல்லக்கூடிய வழியில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கும் நீர் ஆதாரமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் காலப்போக்கில் இப்பகுதியில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக குடியிருப்பு பகுதிகள் பெருகத் தொடங்கியது. அதனால் இந்த குளத்தின் கரையோரங்களில் சிறிது, சிறிதாக ஆக்கிரமிப்புகள் உருவாகியது. அதன் விளைவாக 1.25 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த குளம் ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. தற்போது குளம் சுருங்கி களம் போல் காணப்படுகிறது. குறைவான அளவிலேயே குளம் இருக்கிறது. இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதும் இல்லை என்பதால், தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது அப்படியே விட்டுவிட்டனர்.

இதன் விளைவாக இந்த குளத்தில் கழிவுநீர் கலந்ததால் குளத்து நீர் மாசடைந்துள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்த குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதால் கழிவுநீர் குளமாகவே மாறிவிட்டது. அதுபோல் குளத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் அப்பகுதியின் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது என்று சொல்லும் அளவிற்கு மாறி கிடக்கிறது .

பருவமழை மற்றும் திடீர் மழைகளின் போது இக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அங்கிருந்து வடிகால் வாய்க்கால் மூலமாக எருமனந்தாங்கல் ஏரிக்கு செல்லும். இதற்காக 40 அடி அகலத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. அந்த வாய்க்காலும் பல இடங்களில் தூர்ந்து போயுள்ளது. ஒரு சில இடங்களில் தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளால் தற்போது அந்த வாய்க்கால் 4 அடி அகலத்தில்தான் இருக்கிறது.

இதுபோன்ற பிரச்சினைகளால் குளம் தற்போது மக்களுக்கு பயன்பாடற்ற நிலையில் இருக்கிறது. இந்த குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக வடிகால் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதோடு ஆக்கிரமிப்புகளினால் தூர்ந்துகிடக்கும் வாய்க்காலையும் சீரமைக்க வேண்டும். காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போவதற்கு முன் இக்குளத்தை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!