பழங்குடி கல்லூரி மாணவர் மீது போலீஸ் தாக்குதல் : சிபிஎம் கண்டனம்

பழங்குடி கல்லூரி மாணவர் மீது போலீஸ் தாக்குதல் : சிபிஎம் கண்டனம்
X

சாதி சான்றிதழ் கேட்டு கல்லூரி மாணவர் தர்ணா செய்த மாணவன்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை தாக்கியதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே சாதி சான்றிதழ் கேட்டு போராடிய கல்லூரி மாணவனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், உடனடியாக பாதிக்கப்பட்ட அந்த மாணவருக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்திற்கு உட்பட்ட கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், இவர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சார்ந்தவர், இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கல்லூரியில் இவரிடம் நிர்வாகம் தொடர்ந்து சாதி சான்றிதழ் கேட்டு வருவதாக தெரிகிறது. அதனால் இவர் சம்பந்தப்பட்ட விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்று கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து இருந்தார். விசாரணை அடிப்படையில் இவருக்கு சாதிச்சான்றிதழ் 31- ந்தேதி வழங்கப்பட இருந்ததாக தெரியவந்துள்ளது.

ஆனால்,சாதி சான்றிதழ் தற்போது வழங்க முடியாது என பதில் அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விரக்தியடைந்த மாணவர் மகேந்திரன் வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த சைபர் க்ரைம் ஆய்வாளர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீசார் மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவருடைய கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கூறாமல் சைபர் க்ரைம் ஆய்வாளர் மாணவனை அடித்து காவல் நிலையம் இழுத்து சென்றுள்ளது மனித உரிமைக்கு எதிரானதாகும். மாணவர் மகேந்திரனுக்கு, ஊட்டியில் உள்ள மானுடவியல் துறை விசாரணை செய்து அதன் அடிப்படையில் மூன்று முறை அவருக்கு காட்டுநாயக்கன் இன சாதி சான்றிதழ் வழங்கலாம் என பரிந்துரை அறிக்கை வழங்கியுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

அந்த அறிக்கையையும் சாதி சான்றிதழ் கோரிக்கை மனுவுடன் அவர் சம்பந்தப்பட்ட விழுப்புரம் கோட்டாட்சியருக்கு மனுவுடன் இணைத்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. அமைதியான முறையில் சாதி சான்றிதழ் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மகேந்திரனை தாக்கிய சைபர் க்ரைம் ஆய்வாளர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தை சிபிஎம் வன்மையாக கண்டிக்கிறது என விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!