விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளம் பராமரிப்பு பணி; ரயில்கள் தாமதம்
விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.
Villupuram Railway Station -விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாள பராமரிப்பு பணி இரு நாட்களாக நடந்து வருவதால், பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள தண்டவாளங்கள், சரக்கு ரயில் பெட்டிகளின் பாரத்தை தாங்கக்கூடிய வகையில் உள்ளதா, விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் செல்லும்போதும் ரயில்வே தண்டவாளங்கள் உறுதியாக இருக்கின்றனவா என்று அவ்வப்போது, பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் 4, 5-வது நடைமேடை அருகில் தண்டவாள பாதை பிரியும் இடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது. இப்பணி, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இப்பணியில் ரயில்வே என்ஜினீயரிங் பிரிவினரும், சிக்னல் பிரிவினரும் ஈடுபட்டனர்.
தண்டவாளங்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணிகளும், புதியதாக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் போடும் பணிகளும், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணிகளும் நடந்தது. அதுபோல் தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சரக்கு ரயில்கள் செல்லக்கூடிய தண்டவாள பகுதிகளில், தடம் புரளாமல் எளிதாக சென்றடையும் வகையில் அதன் தண்டவாளங்களை வலுப்படுத்தும் விதமாகவும், பிற்காலத்தில் சரக்கு ரயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கு வசதியாகவும் இந்த பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், இப்பணிகள் தொடர்ந்து இன்றும் நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பணிகள் காரணமாக விழுப்புரம்- மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்- விழுப்புரம் ஆகிய பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை 11.15 மணிக்கு வந்ததும், டீசல் என்ஜின் மாற்றப்பட்டு பகல் 12.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. திருப்பதி- புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் விக்கிரவாண்டி- புதுச்சேரி வரை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் விக்கிரவாண்டியில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருப்பதிக்கு ரயில் புறப்பட்டது.
மேலும் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் கடலூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்டது. அதுபோல் மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு இரவு 9 மணிக்கு வரும் பயணிகள் ரயில் விழுப்புரம் வராமல் கடலூரோடு நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் இன்றும் தண்டவாள பராமரிப்பு பணி தொடர்ந்து நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் அடிப்படை வசதிகளில் ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். தேவையான வசதிகளை செய்துதர உடனடியாக முன்வர வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu