திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டு: மூன்று பேர் கைது
திண்டிவனத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சி.வி.குமார். இவர் கருவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா மயிலம் அடுத்த விழுக்கம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், இவர்களும் தங்களது பணிகளுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய பொழுது வீட்டின் உள்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மேற்புறமாக திருப்பி வைத்துவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் அந்த மர்ம நபர்கள் திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.
பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு தனிப்படைகளை அமைத்து கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படையினர் திண்டிவனம் முத்துகிருஷ்ணன் முதலி தெருவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வசித்து வந்து தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகின்ற கனகராஜ் (33), சென்னை தனிஷ்லான் மோகன் (44), சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மணி என்கிற பாட்டில் மணிகண்டன்(31) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திண்டிவனம் சாய் லட்சுமி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை திருடியதும் , திண்டிவனத்தில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களிடம் இருந்து நகை பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது, அதனை தடுத்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu