விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டுகள்; திணறும் போலீசார்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டுகள்; திணறும் போலீசார்
X

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால், போலீசார் திணறல்; பொதுமக்கள் அச்சம் ( மாதிரி படம்)

விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் கோவில், வீடுகள் என திருட்டுகள் தொடர்ந்து நடப்பதால், போலீசார் திணறி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் திருட்டு மற்றும் கோவில்களில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி திணறி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் அரசு சட்டக் கல்லூரி மாணவியர் விடுதி அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவிய காலத்தின் போது இந்த விடுதி, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது.

அதன்பின், இந்த விடுதி திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. இந்நிலையில், நேற்று விடுதியின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காணை போலீசார் விரைந்து வந்து, விடுதியை பார்வையிட்டனர். அப்போது யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுதியில் இருந்த சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட கல்லூரி விடுதியில் திருட்டா என ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோவில் இருக்கும் மயிலத்தில், பாலய வீதியில் கங்கைகொண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று முன்தினம், (சனிக்கிழமை) இரவு பூஜை முடிந்ததும் கோவில் நிர்வாகி ராஜேந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவில் யாரோ மர்ம நபர் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் பாண்டியன் நகர் 2-வது தெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 2 மர்ம நபர்கள் பைக்கில் நோட்டமிட்டுக்கொண்டே உலா வந்து உள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள பிரபு என்பவரது வீட்டில் கால் பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம், கிருஷ்ணநாராயணன் என்பவரது வீட்டில் ரூ.11 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகை ஆகியவற்றை திருடி உள்ளனர்.. தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்து அங்கிருந்தவர்கள் சத்தம் எழுப்பினர். ஓடி வந்த அப்பகுதி மக்கள் மர்ம நபர்களை பிடிக்க துரத்தினர். திருடர்கள் சுதாரித்து கொண்டு உடனே இருவரும் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். ஆனால் திருடர்கள், பொதுமக்கள் துரத்தியதால், திருடிய நகை மற்றும் பணம் வைத்திருந்த பையை வீசிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுாகா போலீசார், அங்கு வந்து திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டு சென்ற பையை கைப்பற்றிய போலீசார் அதை சோதனை செய்தபோது உள்ளே ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் நகை, கவரிங் நகைகள் ஆகியவை இருந்தது. இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் இது போன்ற திருட்டு சம்பவங்களால் போலீசார் திணறி வருகின்றனர்.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!