பாஜக வளர்ச்சிக்கு பாடுபட புதிய மாவட்ட தலைவர் உறுதி
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக பொறுபேற்றுள்ள வி.ஏ.டி.கலிவரதன்.
விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு பாடுபடுவேன் புதிய தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் தொண்டர்களுக்கு உறுதி அளித்தார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக பொறுபேற்றுள்ள வி.ஏ.டி.கலிவரதன், விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசும்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக என்னை நியமனம் செய்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது மாவட்டத்துக்குட்பட்ட திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய 3 தொகுதிகளில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு முழுமனதுடன் பாடுபடுவேன். கடந்த தேர்தலின் போது தி.மு.க. அரசு 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் ஒன்று பெண்களுக்கான இலவச பஸ் பயணம். ஆனால் நமது மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது.
நமது மாவட்டம் விவசாயிகள், குடிசைகள் நிறைந்த மாவட்டமாகும். ஆனால் இதனுடைய வளர்ச்சிக்கு பாடுபடவில்லை. தமிழக அரசு பதவி ஏற்றபின் 2 முறை மழை பெய்துள்ளது. எல்லிஸ் சத்திரம் அணை உடைப்பு ஏற்பட்டு இதுவரை அதை சீர் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தடுப்பணை கட்டவும் நடவடிக்கை எடுக்கவில்லை. திருக்கோவிலூர் பகுதிகளில் தடுப்பணைகள் தூர்வாரப்படவில்லை.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த கோவில் குளங்களை சீரமைக்கவும் இல்லை. ஆற்காடு சாலை மட்டுமல்லாமல் திருக்கோவிலூர் நகரம் முழுவதும் அனைத்து சாலைகளும் படுமோசமான நிலையில் உள்ளன. தமிழக மக்களின் நன்மைக்காக பா.ஜ.க.வின் போராட்டங்கள் தொடரும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள எந்த அமைச்சரும் ஊழல்செய்ய முடியாது.
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வென்று பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். அதே போல் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 40 மத்திய மந்திரிகள் தமிழகம் வரவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட பொருளாளர் சுகுமார், துணை தலைவர் சதாசிவம், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் பார்த்திபன், நகர தலைவர் வடிவேல் பழனி மற்றும் நிர்வாகிகள் பப்லு, திருநாவுக்கரசு, ஸ்ரீதேவி, தண்டபாணி, வனிதா சுதா, ஆறுமுகம், சிவராஜ், புல்லட் பாபு, சரவணன், ரேகாபாய் ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu