போலீஸ்காரர்களிடமே போலீஸ் மோசடி செய்த சம்பவத்தால் பரபரப்பு

போலீஸ்காரர்களிடமே போலீஸ் மோசடி செய்த சம்பவத்தால் பரபரப்பு
X
விழுப்புரத்தில் பணியாற்றம் 25க்கும் மேற்பட்ட போலீசாரிடம் போலீசாரே ஏமாற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரத்தில்25 போலீஸ்காரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி வீட்டுமனை வழங்குவதாக கூறி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 25 போலீஸ்காரரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலீஸ் ஏட்டு, அவரது மனைவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் சக்திவடிவேலன் ( 40). இவர் கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றினார். அப்போது இவருக்கும் விக்கிரவாண்டியில் அதிர்ஷ்டம் என்ற பெயரில் வீட்டுமனை குலுக்கல் பரிசு சீட்டு திட்டத்தை நடத்தி வந்த மாறன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கத்தின் அடிப்படையில் வீட்டுமனை குலுக்கல் பரிசு சீட்டு திட்டத்திற்கு ஆள்சேர்த்து தரும்படி சக்திவடிவேலனிடம் மாறன் கூறியுள்ளார்.

அதன்படி சக்திவடிவேலன், தன்னுடன் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வரும் சக போலீஸ்காரர் களிடம் இந்த பரிசு சீட்டு திட்டத்தை பற்றி கூறியுள்ளார். இதில் உறுப்பினராக சேர்ந்து முதல் 20 மாதங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வீதமும், அதற்கடுத்த 20 மாதங்கள் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வீதமும் செலுத்தி வந்தால் இறுதியில் வீட்டுமனையை பெற்றுக்கொள்ளலாம் என்று எடுத்துரைத்ததோடு, இத்திட்டத்தில் தானும், தனது மனைவி வித்யாவும் பங்குதாரர்களாக இருந்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

இதைநம்பிய 25-க்கும் மேற்பட்ட சக போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் சக்திவடிவேலன் மற்றும் அவரது மனைவி வித்யா ஆகியோரிடம் பணம் செலுத்தி வந்தனர். இந்த பரிசு சீட்டு திட்டத்தின் முதிர்வு காலமான 40 மாதங்கள் வரை பணம் செலுத்திய நிலையில் பணம் கட்டியவர்களுக்கு வீட்டுமனை ஏதும் வழங்கப்படவில்லை.

இதுபற்றி பணம் செலுத்திய போலீசார், சக்திவடிவேலன், அவரது மனைவி வித்யா ஆகியோரிடம் சென்று பலமுறை வற்புறுத்தி கேட்டுள்ளனர். அதுபோல் மாறனிடமும் சென்று கேட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாறன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து பணம் செலுத்திய போலீசார், சக்திவடிவேலனிடம் சென்று தங்களுடைய பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். அதற்கு தனக்கும் எதுவும் தெரியாது என்றும் வீட்டுமனை குலுக்கல் திட்டத்தை நடத்திய மாறனும் இறந்துவிட்டதால், நீங்கள் நீதிமன்றம் சென்றாலும் என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி பல லட்சம் ரூபாயை மோசடி செய்ததோடு அந்த போலீசாரை தகாத வார்த்தையாலும் திட்டியுள்ளார்.

இதுகுறித்த புகார் அளித்தும் போலீஸ் ஏட்டு சக்திவடிவேலன், அவரது மனைவி வித்யா ஆகிய இருவரின் மீதும் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபற்றி பணம் செலுத்திய போலீசார், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியனை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் மனுவை பெற்ற அவர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அந்த சமயத்தில் சக்திவடிவேலன், கியூ பிரிவில் பணியாற்றி வந்ததால் அவரை அங்கிருந்து ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மோசடி சம்பவம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர், போலீஸ் ஏட்டு சக்திவடிவேலன், அவரது மனைவி வித்யா ஆகிய இருவரின் மீதும் நம்பிக்கை மோசடி, மனஉளைச்சலை ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil