தானாகவே உடலில் தீப்பிடிக்கும் சிறுவனின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவி
உடலில் தானாகவே தீப்பற்றி எரிந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு இலவச மனைப்பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியர் பழனி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாகரன்-ராஜேஸ்வரி. இந்த தம்பதியினரின் மகன் ராகுலின் உடலில், கடந்த 2013-ம் ஆண்டில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்தது.பின்னர் ராகுல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ராகுல், அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் ராஜேஸ்வரி, கடந்த சில வாரத்திற்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இலவச வீட்டு வீட்டுமனை, தொகுப்பு வீடு வழங்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். இதன் அடிப்படையில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுலின் மருத்துவ செலவிற்காக ஏற்கெனவே மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் பராமரிப்பு நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தற்போது வீட்டுமனைப்பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu