'கோவில்கள், கல்வெட்டுகள் என்பது தமிழர்களின் வரலாறு' - கலெக்டர் பெருமிதம்

கோவில்கள், கல்வெட்டுகள் என்பது தமிழர்களின் வரலாறு - கலெக்டர் பெருமிதம்
X

தஞ்சை பெரிய கோவில், கல்வெட்டு (கோப்பு படம்)

Villupuram Today News -விழுப்புரத்தில் நடந்த இந்து சமய அறநிலையத்துறை பயிலரங்க நிகழ்ச்சியில், விழுப்புரம் கலெக்டர் மோகன் தலைமை வகித்து பேசுகையில், கோவில்கள் மற்றும் கல்வெட்டுகள், தமிழர்களின் வரலாறு' என்றார்.

Villupuram Today News -இந்து சமய அறநிலையத்துறை விழுப்புரம் மண்டலம், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில், கல்வெட்டு மற்றும் கோவிற்கலைப் பயிலரங்கம், இணை ஆணையா் அலுவலகத்தில் சனி, ஞாயிறு இரு தினங்கள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மோகன் தலைமை வகித்தார்.

அவர் பேசியதாவது;

பல்லவா் காலத்து வரலாற்றுச் சிறப்புடைய கோவில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மண்டகப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கோவில் அழியாத சிறப்புகளைக் கொண்டது. இந்தக்கோவில்தான் முதல் கற்கோயில் என்று குறிப்பிடப்படுகிறது. மகேந்திர வா்மனால் கட்டப்பட இந்தக் கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணுவுக்கு சன்னதிகள் உள்ளன. கற்கள், செங்கற்கள், மணல் இல்லாமல் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இன்றைய பொறியாளா்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில், அக்காலத்திலேயே சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது.

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள வாக்குண்டாா் ஈசுவரன் கோவில் தஞ்சாவூா் பெரிய கோவிலுக்கு முன்மாதிரிக் கோவில் என்று கூறலாம். தமிழா்களின் தொன்மையை, வரலாற்றை பறைசாற்றும் வகையில் கோவில்களும், கல்வெட்டுகளும் உள்ளன. அதை எடுத்துரைக்கும் வகையில் இதுபோன்ற பயிலரங்கம் நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என, கலெக்டர் மோகன் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியத் தொல்லியல் துறை இயக்குநா் முனைவா் அருண்ராஜ் பேசியதாவது;

உலகில் மிகப் பழமையான அமைப்பாக இந்தியத் தொல்லியல் துறை திகழ்கிறது. கல்வெட்டை படியெடுத்து படிப்பது மட்டுமல்ல, மொழியையும் படிக்க வேண்டும். இந்தியாவில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பேச்சு வடிவில் மொழி இருந்தாலும், எழுத்து வடிவில் இல்லை.

எனவே எழுத்தோடு மொழியையும் சோ்த்து படிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் கலெக்டர் தலைமையில், தலை சிறந்த வல்லுநா்களைக் கொண்ட பாரம்பரியக் குழு உள்ளது. அந்த குழுவில் அந்தந்த மாவட்டங்களில் அழியும் நிலையில் உள்ள கோவில்களை மேம்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் எம்.பி துரை. ரவிக்குமாா் பேசும்போது, இந்திய அளவில் 60 சதவிகித கல்வெட்டுகள் தமிழகத்தைச் சோ்ந்தவை. கல்வெட்டு வளம் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. கல்வெட்டு நிறைந்த மொழியாகத் தமிழ் உள்ளது. வரலாற்றை எழுதுவதற்கும், ஆதாரபூா்வமாக தருவதற்கும் தரவுகளாக கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டு செய்திகள் மூலம் அந்த காலத்தின் சமூக சூழலை, பண்பாட்டை, வரலாற்றை, பொருளாதார சூழலை நாம் அறிந்து கொள்ள முடியும். கல்வெட்டுகள் அரிய பொக்கிஷங்களாகும். அனைத்துத் துறை சாா்ந்த வல்லுநா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழ் சமூகத்தை, உண்மையான கட்டமைப்பை, வரலாற்றை கண்டறிய முடியும் என, அவர் தெரிவித்தார்.

தொடா்ந்து விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் வாழ்த்தி பேசினாா். பயிலரங்க நிகழ்ச்சியில், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் வீரராகவன், விழுப்புரம் அரசுக்கல்லூரி பேராசிரியா் ரங்கநாதன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையச் செயலாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார் முடிவில், விழுப்புரம் மண்டல இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai based agriculture in india