கட்டடம் எப்ப இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் மாணவர்கள்
சேதமடைந்த நிலையில் உள்ள மேலமேடு கிராம தொடக்கப்பள்ளி
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது மேலமேடு கிராமம், இங்கு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மேலமேடு கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு காலத்தில் இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்த இப்பள்ளியில் தற்போது வெறும் 35 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்த்து விட்டதாலோ அல்லது மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி இருப்பதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம் என்று எண்ணி விடாதீர்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கு இந்த பள்ளி கட்டிடம் தான் காரணம்.
இந்த தொடக்கப்பள்ளி கடந்த 1972-ம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டி அதே ஆண்டில் திறந்தும் வைத்தார். மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் திறந்த போது இங்கு சாலாமேடு, காவணிப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வந்தனர்.
ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த பள்ளி கட்டிடம் பழுடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் விழுந்து காணப்படுகிறது. மேற்கூரையில் வேயப்பட்டுள்ள ஓடுகளும் உடைந்து இருப்பதால் மழை பெய்தால் வகுப்பறைகள் குளமாக மாறிவிடுவதால் மழைக்காலங்களில் இப்பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 52 ஆண்டுகளை கடந்த இப்பள்ளி கட்டிடம் இப்ப விழுமோ.. எப்ப விழுமோ... என்ற நிலையில் அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால் பயந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. மாறாக சற்று தொலைவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு கூட வழியில்லாத பெற்றோர்தான் தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களும் எப்போது என்னவாகுமோ என்ற அச்சத்துடன் உயிரை பணயம் வைத்து பாடம் படித்து வருகின்றனர். எனவே மாணவர்களை அச்சுறுத்தி வரும் இப்பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பெற்றோர் கோாிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் பள்ளி கட்டடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டடம் பழுதடைந்துள்ளதால் இங்கு செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள கவணிப்பாக்கம் கிராமத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த கட்டடத்தை பயன்படுத்துதற்கு தகுதி இல்லை என்ற போதிலும் 35 மாணவர்கள் தினசரி உயிரை பணயம் வைத்து படித்து வருகின்றனர். பருவ மழைக்காலமும் நெருங்கி வருவதால் விபரீதம் நிகழ்வதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இப்பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து இங்கு படித்து வரும் மாணவர்களை மாற்றுப் பள்ளியில் சேர்ப்பதோடு, கட்டடத்தை முழுமையாக இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் பலமாக எழும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu