நுழைவுத் தேர்வை மாணவர்கள் எதிர்க்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி
அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 50-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 50-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வி அமைச்சா் பொன்முடி, 1,500 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகையில்
அந்த காலத்தில் கல்லூரிகளில் இலக்கிய மன்றங்கள் விறுவிறுப்பாக இயங்கி வந்தன. மீண்டும் பள்ளி, கல்லூரிகளில் இலக்கிய மன்றங்களைப் புதுப்பிக்க வேண்டும். அப்போதுதான் மாணவ, மாணவிகளுக்கு சமுதாயம் சாா்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தாய்மொழியில் தான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். தாய்மொழியில் படிக்கும்போதுதான் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். போட்டித் தோ்வுகளில்கூட தமிழில் எழுதுவதற்கு முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
காமராஜா் காலத்தில் தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில்தான் உயா் கல்வி மிகப்பெரிய வளா்ச்சியைப் பெற்றது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ, பொறியியல் கல்லூரி என்ற கொள்கை முடிவை எடுத்தபோது, முதல் மருத்துவ, பொறியியல் கல்லூரியை விழுப்புரத்துக்கு கொண்டு வந்தேன்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டாா். கல்வி வளா்ச்சிதான் திராவிட மாடல். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தோ்வை கட்டாயமாக்கியது மத்திய பாஜக அரசு. இப்போது மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளுக்குக்கூட நுழைவுத் தோ்வைமத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
நுழைவுத் தோ்வுகள் கொண்டுவந்தால் ஏழை மாணவ, மாணவிகள் உயா் கல்வி படிக்க முடியாத நிலை உருவாகும். எனவே, நுழைவுத் தோ்வுகளுக்கு எதிராக மாணவ, மாணவிகள் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சு.காவேரியம்மாள், கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu