தற்கொலைக்கு லீவு கேட்ட எஸ்ஐ: பரபரப்பான விழுப்புரம் காவல் நிலையம்
மகிபால்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மகிபால்(வயது 59). இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததால், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தான் குற்றம் ஏதும் செய்யவில்லை எனவும், ஆயுதப்படையில் கடுமையாக வேலை வாங்குவதாகவும், தனக்கு ஓய்வுபெற 6 மாத காலம் மட்டுமே உள்ளதால் மீண்டும் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளிடம் கூறி வந்தார். மேலும் இது தொடர்பாக அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேச முயற்சி செய்துள்ளார்.
இருப்பினும் அவரால் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மகிபால், கடந்த சனிக்கிழமை போலீஸ் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீசாருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், அதனால் எனக்கு ஒருநாள் விடுமுறை தாருங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பிறகு அவர் திடீரென மாயமானார்.
இதைபார்த்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் தலைமையிலான போலீசாரை அனுப்பி மாயமான மகிபாலை கண்டுபிடித்து சமாதானம் பேச உத்தரவிட்டார். அதன்படி போலீசார் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி போலீஸ் குடியிருப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டா் மகிபாலை போலீசார் சந்தித்து சமாதானப்படுத்தினர்.
பின்னர் மகிபாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, அவரை விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனால் மாவட்ட காவல்துறையில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu