விழுப்புரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு..

விழுப்புரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு..
X

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம். (கோப்பு படம்).

விழுப்புரம் அருகே தனித்தனி சம்பவத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவியும், கப்பூரை சேர்ந்த காளி மகன் மாணிக்கம் (21) என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அந்த மாணவி, மாணிக்கத்துடனான தொடர்பை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறும், இல்லையெனில் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி அவருடைய பெற்றோர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர், மாணிக்கம் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது அவரும், அவரது அண்ணன் அருண்குமாரும் (25) சேர்ந்து மாணவியின் பெற்றோரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணிக்கம், அருண்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரம் அருகே பள்ளிபுதுப்பட்டை சேர்ந்த 4 வயதுடைய சிறுமி, தனது வீட்டின் பின்புறம் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பிரதாப் (21) என்பவர் அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரதாப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமைகள் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் அந்தப் பகுதி மக்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாலியல் வன்கொடுமை குறித்தும், சட்ட நுணுக்கங்கள் குறித்தும் அதனுடைய பாதிப்புகள் குறித்தும் மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதனை கவனத்தில் எடுத்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுகளை தீவிர படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு மக்களிடத்தில் உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!