விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் கடல் அரிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பிள்ளைசாவாடி கடற்கரையோர பகுதியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதமடைந்துள்ள படம் .
விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் தாலுகாவில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பிள்ளைச்சாவடி என்ற கிராமத்தின் ஒரு பகுதி தமிழகத்தை சேர்ந்ததாகவும், மற்றொரு பகுதி புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்ததாகவும் உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தில் ஏற்படும் புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். அந்த சமயத்தில் ஆக்ரோஷமாக எழும் அலைகள் கரையை வேகமாக வந்து மோதிச்செல்லும். அவ்வாறு வரும்போதெல்லாம் கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிந்து விழுவது வாடிக்கையாகி விட்டது. இதுவரை பிள்ளைச்சாவடி கிராமத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவில் சென்னை அருகே கரையை கடந்தது. இந்த புயலால் பிள்ளைச்சாவடி உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அத்துடன் வழக்கத்தை விட 100 மீட்டர் தூரத்துக்கு வெளியே வந்தது.
இதனால் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டு இருந்த வீடுகள் மீது கடல் அலைகள் ஆக்ரோஷமாக வந்து மோதின. கடல் கொந்தளிப்புக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மீனவர் சங்க கட்டிடம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதை சுதாரித்துக்கொண்ட மக்கள், வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர்.
மேலும் கடல் அரிப்பை தடுப்பதற்காக நடப்பட்டு இருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் கடல் அலை அடித்துச்சென்றது. கதவு, ஜன்னலை எடுத்துச்சென்றனர் மேலும் சிலர், தங்களது வீடும் கடல் அரிப்பால் இடிந்து விடும் என்று கருதி, வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைத்தனர். தீ விபத்தில் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று சொல்வார்கள். அதுபோல் இடிந்து விழப்போகும் வீட்டில் எடுக்கிற வரை லாபம் என்று நினைத்த உரிமையாளர்கள், சுத்தியல் மற்றும் கடப்பாறை கம்பியால் உடைத்து கதவு, ஜன்னல், இரும்பு கேட்டுகளை எடுத்துச் சென்றனர். சிலர் புதிய வீடுகளையும் இடித்ததை காணமுடிந்தது.
இதற்கிடையே கடல் அரிப்பால் வீடுகள் இடிந்து விழுந்ததற்கு அதிகாரிகள்தான் காரணம் என்றும், ஏற்கனவே கடந்த 5 ஆண்டாக கடல் அரிப்பை தடுக்க கருங்கற்களை கொட்ட வேண்டும் என்று கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் பிள்ளைச்சாவடி கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கடல் அரிப்பு ஏற்படும் பகுதியில் விரைவில் கருங்கற்களை கொட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியும் ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி தமிழக பகுதிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டார். அவரிடம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து 861 குடும்பத்தை சேர்ந்த 763 ஆண்கள், 1178 பெண்கள், 557 குழந்தைகள் என 2 ஆயிரத்து 498 பேர் 49 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu