விழுப்புரத்தில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 59.50 லட்சம் மோசடி

விழுப்புரத்தில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 59.50 லட்சம் மோசடி
X

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பைல் படம்.

விழுப்புரம் தனியார் உணவுப்பொருள் நிறுவனத்திடம் 59.50 லட்சம் ஏமாற்றியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரத்தில் தனியார் உணவுப்பொருள் நிறுவனத்திற்கு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.59½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 52). இவர் விழுப்புரத்தில் தனியார் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு சென்னை திருக்கச்சூர் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த கமல்ராஜ் (49), அவரது மனைவி சுரேகா ஆகியோர் வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

அப்போது கார்த்திகேயனிடம் குறைந்த விலையில் மளிகைப்பொருட்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்கித்தருவதாக அவர்கள் இருவரும் கூறினர். மேலும் தாங்கள், விற்பனை பிரதிநிதிகள் நலவாழ்வு நலச்சங்கம் நடத்தி வருவதாக கூறி அச்சங்கத்தில் இணைத்துக்கொள்வதாக கூறி கார்த்திகேயனுக்கு மாநில செயலாளர் பதவி வழங்கியுள்ளனர். கார்த்திகேயனுக்கு பல வியாபாரிகளை அறிமுகப்படுத்தி அவர்களிடமிருந்தும் உணவுப்பொருட்கள் வாங்கித்தருவதாக கமல்ராஜ், சுரேகா ஆகியோர் கூறினர்.

இதை நம்பிய கார்த்திகேயன், அந்த 2 பேர் நடத்தி வரும் மார்க்கெட்டிங் வங்கி கணக்கில் பல தவணைகளாக ரூ.66 லட்சத்து 30 ஆயிரத்து 658-ஐ செலுத்தியுள்ளார். பணத்தை பெற்ற அவர்கள் இருவரும், கார்த்திகேயனுக்கு உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எதுவும் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். உடனே அவர்கள் இருவரிடமும் சென்று, தான் அனுப்பிய பணத்தை திருப்பித்தருமாறு கார்த்திகேயன் கேட்டதற்கு ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 100-ஐ மட்டும் கொடுத்தனர்.

மீதமுள்ள ரூ.59 லட்சத்து 45 ஆயிரத்து 730-ஐ கார்த்திகேயனுக்கு கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து வந்தார். கார்த்திகேயன் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி பல முறை கேட்டார். அதற்கு பணத்தை தரும்படி கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவோம் என கணவனம் மனைவியும் மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கமல்ராஜ், சுரேகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கமல்ராஜை போலீஸ் துணை சூப்பிரண்டு உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். அவரது மனைவி சுரேகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோன்று இவர்கள் வேறு எங்கேயாவது ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய நபர்களை நம்பி இதுபோன்று அதிக தொகையை கொடுத்து யாரும் ஏமாறவேண்டாம் என்றும் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!