விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது
பைல் படம்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு அந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதியின் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளை போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் சமயத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தில் யாரேனும் செயல்படுவதை தடுக்கும் வகையிலும், தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற முதல் நடவடிக்கையாக ரவுடிகள், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய காவல் உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 94 ரவுடிகளை போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். இவர்களில் பலர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தாங்கள் எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் எனவும், அப்படி மீறி பிரச்சினைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பத்திரங்களை போலீசாரிடம் எழுதி கொடுத்து வருகின்றனர். ரவுடிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu