சேறும் சகதியுமாக மாறிய விழுப்புரம் நகராட்சி பகுதிகள்
நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, பாதிப்படைந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் நகராட்சியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றாலும் மழை நீர் வெளியேறுவதில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் பல்வேறு சாலைகள், தெருக்களில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமை பெறாத நிலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக சேறும் சகதியில்லாமல் மாறி துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்கள் நடப்பதற்கும் வாகனங்கள் சென்று வருவதற்கும் ஏற்ற வகையில் சீரமைக்கப்படவில்லை
விழுப்புரம் நகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அங்குள்ள வீதியில் வழிந்தோடியது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் திடீரென அங்குள்ள மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்து கழிவுநீரை அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிகளில் கழிவுநீரை அகற்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாக்கடை கால்வாயையும் தூர்வாரி அடைப்புகளை சரிசெய்தனர். இப்பணிகளை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பார்வையிட்டு, நிரந்தர தீர்வு காணும் வகையில் வாய்க்கால் அமைக்கும்படி அறிவுறுத்தினார்.
விழுப்புரம் நகராட்சி அனைத்து தெருக்களும் தமிழகத்திலேயே சிமெண்ட் ரோடுகளாக காட்சியளித்து, கடந்த பல ஆண்டுகளாக அழகு நகரமாக விழுப்புரம் இருந்து வந்தது இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது திட்டத்தின் மூலம் நகராட்சியில் உள்ள ஒவ்வொரு தெருக்களையும் தோண்டி பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் நோண்டி போடப்பட்ட எந்த தெருக்களையும் முறையாக சரி செய்யவில்லை என்பதே ஒவ்வொரு அப்பகுதி மக்களின் வருத்தமாகவே இருந்து வருகிறது
நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால், இந்த மழை காலத்தில் தேங்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மர்ம காய்ச்சலுக்கு பொதுமக்கள் ஆட்பட நேரிடும் என மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu