விவசாயிகள் புகார் மனுவுக்கு அடுத்த கூட்டத்தில் பதில்: ஆட்சியர் தகவல்

விவசாயிகள் புகார் மனுவுக்கு அடுத்த கூட்டத்தில் பதில்: ஆட்சியர் தகவல்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டம். 

விழுப்புரம் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் மனுவுக்கு அடுத்த கூட்டத்தில் பதிலளித்துவிட்டு கூட்டம் தொடங்கி நடத்தப்படும் என ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், ராஜஸ்ரீ தனியார் சக்கரை ஆலை 2021-22 அரவை பருவத்தில் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். மின் இணைப்பு வழங்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

விழுப்புரம் விற்பனைக்குழு அலுவலகத்தில் சுத்தமான குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும், கிடப்பில் போடப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தை துவங்க வேண்டும், ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்தும் இன்னும் பட்டா வழங்கவில்லை எனவும், மணிலா விதை இருப்பு வைக்க வேண்டும்,ஊராட்சிகளில் வழங்கப்படும் குடிதண்ணீரில் பிளிச்சிங் பவுடர் போடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

இதனை கேட்டறிந்த ஆட்சியர் மோகன் பேசுகையில், விவசாயிகளின் நலன் கருதி வரும் கூட்டத்தில் பேசுகின்ற விவசாயிகள் பெயர்கள் மாற்றி அழைக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தரைகள் இருப்பு அதிகமாக இருப்பதை இந்த வாரத்தில் சரிசெய்துவிடுவதாகவும், திருவெண்ணெய்நல்லூரில் இ-சேவை மையம் அமைப்பதற்கு முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனை கூடத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் சரிசெய்துவிடுவதாகவும், பத்திர பதிவுத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமெனவும், மேலும் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் இனி வரும் காலங்களில் கூட்டம் துவங்கும் முன்பாக மனுதாரர்களுக்கு அளிக்கப்பட்ட பதில்களின் விவரம் தெரிவிக்கப்படும். விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண் பெறுவதற்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது எனவும், விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தங்குதடையின்றி கிடைத்திட வழிவகை செய்யப்படும் எனவும், விவசாய நிலங்களில் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்லாதவாறு மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் ரமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சண்முகம், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கம் யசோதாதேவி, மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய் மற்றும் விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்