விழுப்புரம் அருகே காப்பகத்திலிருந்து மனநலம் பாதித்தவர்கள் மீட்பு

விழுப்புரம் அருகே காப்பகத்திலிருந்து மனநலம் பாதித்தவர்கள் மீட்பு
X

அன்பு ஜோதி காப்பகம்.

விழுப்புரம் அருகே அன்புஜோதி காப்பகத்தில் மனநலம் பாதித்தவர்கள் டார்ச்சர் என்ற குற்றச்சாட்டை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களை மாவட்ட ஆட்சியர் பழனி செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டலபுலியூர் ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் இதுவரை 17 பேர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், குண்டலபுலியூர் கிராமத்தில் ஆதரவற்றோருக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது. இதை கேரளாவை சேர்ந்த ஜீபின் பேபி(வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 109 ஆண்,33 பெண், ஒரு குழந்தை உட்பட 142 ஆதரவற்றோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி ஜாபருல்லா(45) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரை சேர்த்துள்ளார்.

பின்னர் அமெரிக்கா சென்ற இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். அப்போது ஜாபருல்லாவை பார்ப்பதற்காக வந்தபோது அவரிடம் ஆதரவற்றோர் இல்ல உரிமையாளர் ஜீபின் பேபி இடம் பற்றாக்குறையால் பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஜாபருல்லாவை இடமாற்றம் செய்துள்ளோம். அங்கு போய் பார்க்குமாறு கூறினார். இதையடுத்து ஹனிதீன் பெங்களூரு சென்று ஆதரவற்றோர் இல்லத்தில் பார்த்த போது அங்கு ஜாபருல்லாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குண்டலபுலியூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்து கேட்ட போது, சமீபத்தில் இங்கிருந்து 50 பேர் தலைமறைவாகி விட்டனர். அதில் ஜாபருல்லாவும் ஒருவர் என ஜீபின் பேபி கூறியுள்ளார்.

இதையடுத்து ஜாபருல்லாவை காணவில்லை என கெடார் காவல் நிலையத்தில் ஹனிதீன் கொடுத்த புகாரை ஏற்க போலீசார் மறுத்ததால், அவர் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து ஜாபருல்லாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜாம்பாள், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் தங்கவேல் மற்றும் காவல்துறையினர் கொண்ட குழுவினர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்றனர், ஆதரவற்றோர் இல்லத்தின் கதவுகளை மூடி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் உரிமையாளர் ஜீபின் பேபி, அங்கு தங்கியுள்ள ஆதரவற்றோர் 137 பேரிடம் வீடியோ பதிவுடன் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஆசிரமத்தில் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், 17 பேர் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இந்த விசாரணை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்த 142 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பழனி செவ்வாய்க்கிழமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார், அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், உட்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காப்பகத்தில் டார்ச்சர் செய்வதாக வந்த குற்றசாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட துறையினர், காப்பகத்தில் ஆய்வு செய்து, அங்கிருந்து 109 ஆண்கள், 33 பெண்கள் ஒரு ஆண் குழந்தை மீட்கப்பட்டனர், அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர், மேலும் மாவட்டத்தில் உள்ள இது போன்ற காப்பகங்கள் அரசு அங்கீகாரம் பெற்று உள்ளனவா என விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார், அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story