மணிலாவில் விதைப்பண்ணை அமைத்து இரட்டிப்பு லாபம் பெற வேண்டுகோள்
மணிலாவில் விதைப்பண்ணை அமைத்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் மணிலா பயிர், கார்த்திகை பட்டத்தில் அதிகளவில் விதைக்கப்படுகிறது. எனவே இந்தப்பட்டத்தில் மணிலா விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம். மணிலா பயிரில் விதைப்பண்ணை அமைக்க தரணி, டிஎம்வி 14, ஜிஜேஜி 31, ஜிஜேஜி32, ஜிஜேஜி 9, கே 1812 ஆகிய ரகங்களில் ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகள் உள்ளது. விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்துறை அலுவலர்களை அணுகி மானிய விலையில் விதைகளைப்பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.
விதைகளை விதைப்பதற்கு முன் மணிலா ரைசோபியம் நுண்ணுயிர் பாக்கெட்டை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி விதைப்பண்ணையை பதிவு செய்ய பதிவுக்கட்டணமாக ரூ.25 (ஒரு விதைப்பு அறிக்கை), வயலாய்வு கட்டணமாக ரூ.80 (ஒரு ஏக்கருக்கு), பரிசோதனை கட்டணமாக ரூ.80 (ஒரு விதைப்பு அறிக்கை) என்று செலுத்த வேண்டும். அதிக மகசூல் விதைச்சான்று அலுவலர்கள் விதைத்த 60-வது நாள் மற்றும் 90-வது நாள் என 2 முறை வயலாய்வு செய்வார்கள். 3-வதாக 135 நாட்களுக்குள் மணிலா விதைக்குவியலை ஆய்வு செய்வார்கள்.
வயலாய்வின்போது பிற ரக கலவன்கள் ஏதாவது இருந்தால் அதனை அப்புறப்படுத்த சொல்வார்கள். மணிலா பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் ஏக்கருக்கு 80 கிலோ மற்றும் விதைத்த 45-வது நாள் மேலுரமாக 80 கிலோ என மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும், இதனால் திரட்சியான காய்கள் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும். மேலும் தகுதியான விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அரசு வழங்குவதால் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதுபோன்று அரசு கூறும் அறிவுரைகளை ஏற்று விவசாயிகள் தாங்களே விதைப்பண்ணைகளை அமைத்து அரசுக்கு வழங்குவதோடு தாங்களும் விற்பனை செய்யலாம் என்பது தெரிந்து இதை கடைபிடிக்க வேண்டும் தங்கள் நிலங்களில் விதைப்பதற்கும் நடுவதற்கும் தனியார் நிறுவனங்களில் ஏமாந்து தரச் சான்று பெறாத விதைகளை வாங்கி நம்பிக்கை அடிப்படையில் விதைத்து ஒரு சிலர் மகசூல் குறைந்தும் ஒரு சிலர் மகசூலே இல்லாமல் போய் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்தும் நஷ்டம் அடைகின்றனர். அதனால் விவசாயிகள் அரசு தரப்பு வேளாண்மை துறை கூறும் கருத்துக்களை ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் விவசாயிகள் இது போன்ற விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu