விழுப்புரத்தில் பாரம்பரிய விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற வேண்டுகோள்
விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம், இருவேல்பட்டு, வானூர் அரசு விதைப்பண்ணைகளில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, செங்கல்பட்டு சிறுமணி, பூங்கார் போன்ற ரகங்கள் கடந்த ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த விதைகளானது கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 11 மெட்ரிக் டன்கள் நடப்பாண்டு வினியோகம் செய்யப்பட தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் செங்கல்பட்டு சிறுமணி ரக விதைகள் 6 ஆயிரம் கிலோவும், தூயமல்லி ரக விதைகள் 5 ஆயிரம் கிலோவும்,இருப்பில் உள்ளது. மொத்த விதையளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எனவே விழுப்புரம் மாவட்ட பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu