விழுப்புரம் அருகே சுடுகாட்டுப்பாதையை மறித்த இரும்பு கேட் அகற்றம்
சுடுகாட்டு பாதை பைல் படம்.
விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம்,நாயனூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மயானத்திற்கு செல்லும் பொதுப் பாதையை மறித்து, ஆக்கிரமித்து தனிநபர்கள் இரும்புக் கதவு போட்டு அடைத்து வைத்திருந்த சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், விழுப்புரம் மாவட்ட குழுவும், கண்டாச்சிபுரம் வட்ட கமிட்டியும் கடந்த ஓராண்டாக தொடர் நடவடிக்கை மற்றும் போராட்டத்தை நடத்தி வந்தது.
செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஆகியவை வழக்கம்போல ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, இரும்புக் கதவை அகற்றாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 13-ஆம் தேதி,மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் மற்றும் மாவட்ட ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டு இரும்புக் கதவை அகற்றும் நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் போராட்டத்தை அறிவித்திருந்தது.
போராட்டத்தை வலுவாக நடத்துவதற்கான அனைத்து தயாரிப்புகளும் நடந்து வந்த நிலையில், வி.தொ.ச. மாவட்ட தலைவர் வி.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வட்ட தலைவர் எம். சண்முகம், வட்ட செயலாளர் ராஜா ஆகியோருடன் சம்மந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், அதனை தொடர்ந்து அதன் அடிப்படையில் கடந்த 11.09.2022 ந்தேதி காலை சட்டவிரோத மயான பாதையை மறித்த இரும்புக் கதவை அகற்றினர். இது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த முழு வெற்றியாகும்.
உறுதிமிக்க போராட்டத்தை நடத்திய அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்து உள்ளது.மேலும் இந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வெற்றிக்கு அந்த நாயனூர் கிராம மக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களும் பரவலாக நன்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu