விழுப்புரம் பெருமாள் கோயிலில் ஒரு லட்சம் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி
பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள லட்டுகள்.
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த மாதம் 23-ந் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். லட்டுகள் தயாரிக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த லட்டு கமிட்டிக்குழுவினர் லட்டுகள் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். அதுபோல் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி விழுப்புரத்தில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இதற்காக சர்க்கரை, கடலை பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில் லட்டு கமிட்டிக்குழுவினர் மற்றும் சமையல் கலைஞர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த லட்டுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டதும் நாளை பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu