விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் தடுப்பணை வெடிவைத்து உடைப்பு
விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1950-ம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. 72 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணைக்கட்டில், வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சாத்தனூர் அணை நிரம்பியதால், தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருந்தது. உடைப்பு ஏற்படும் அபாயம் அதிகப்படியான தண்ணீர் வருவதால் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. அதன் வழியாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் அதையொட்டி அமைந்துள்ள ஆற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை அதன் பலத்தை இழந்தது. எந்த நேரத்திலும் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கண்காணித்தனர். ஆற்றில் சமநிலையில் நீரோட்டம் இல்லாமல், ஒரு பகுதியில் மட்டுமே செல்வதால் தான் இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக கூறி, அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் நேற்று காலையில் ஈடுபட்டனர்.
தென்பெண்ணை ஆற்றில் ஓடும் தண்ணீர், அணைக்கட்டின் மையப்பகுதி வழியாக தடையின்றி ஓடும் வகையில், அணைக்கட்டின் மையப்பகுதியில் வெடிவைத்து தகர்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அணைக்கட்டின் மையப்பகுதி உடைத்து , தண்ணீர் அந்த வழியாக வழிந்தோட செய்யப்பட்டது. இதனால் அங்கு தேங்கி இருந்த தண்ணீர் அனைத்தும் வேகமாக வடிந்தது.
அணைக்கட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு அணைக்கட்டின் 4 மதகுகள் உடைந்தது. இதனால் அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், உடைந்த மதகுகள் வழியாக வீணாக வெளியேறியது. இந்த 4 மதகுகளையும் சரி செய்து, அணைக்கட்டில் தண்ணீர் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தோம். ஆனால் 4 மதகுகளையும் அதிகாரிகள் சரி செய்யவில்லை என கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu