விழுப்புரம் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் மோசடி
வங்கி மேலாளர் பேசுவதாக கூறி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த முடையூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59), விவசாயி. கடந்த 14-ம் தேதியன்று இவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் பேசுவதாகவும், உங்களுடைய ஏ.டி.எம். அட்டை திடீரென இயக்கம் இல்லாமல் போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் புதிய ஏ.டி.எம். அட்டை வழங்க உங்களுடைய வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டார். இதை நம்பிய லட்சுமணன், வங்கி மேலாளர் தான் பேசுகிறார் என்று நம்பி தன்னுடைய விவரங்களை அனுப்பியுள்ளார். பின்னர் செல்போனுக்கு குறுந்தகவலாக வரும் ஓடிபி எண்ணை சொல்லுமாறு அந்த நபர் கூறியதன்பேரில் லட்சுமணன், தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் லட்சுமணன், கணக்கு வைத்திருக்கும் சித்தாமூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் கணக்கில் இருந்து 4 தவணைகளாக ரூ.1 லட்சத்தை யாரோ மர்ம நபர் எடுத்துவிட்டதாக லட்சுமணனின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பூங்கோதை, உதவி ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவல்துறையினர் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu