விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21,543 மாணவ மாணவிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய    21,543 மாணவ மாணவிகள்
X

தேர்வை மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சி.பழனி

தேர்வை எவ்வித பதற்றம் இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் டூ இத்தேர்வை 21,543 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் தமிழ் தேர்வுடன் தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களிலும் என 101 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத 121 அரசு பள்ளிகள், 16 அரசு உதவி பெறும் பள்ளிகள், 56 தனியார் பள்ளிகள என 193 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 591 மாணவர்களும், 11 ஆயிரத்து 504 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 95 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். பொதுத்தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் அனைவரும் காலை 9.30 மணிக்குள் தேர்வு கூடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாகவே காலை 8.30 மணிக்கெல்லாம் மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தனர்.

அவர்கள், தேர்வை நல்ல முறையில் எழுதி சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வணங்கியும், பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியோர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றும் தேர்வு மையத்திற்கு வந்தனர். தேர்வை எவ்வித பதற்றம் இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். சரியாக காலை 10 மணிக்கு மாணவ- மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

வினாத்தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து படித்து பார்ப்பதற்காக முதல் 10 நிமிடங்களும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாணவ- மாணவிகள் ஆர்வமுடனும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் தேர்வு எழுதினார்கள். காலை 10.15 மணியில் இருந்து பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை 10 ஆயிரத்து 715 மாணவர்களும், 10 ஆயிரத்து 828 மாணவிகளும் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 543 மாணவ- மாணவிகள் எழுதினர். 875 மாணவர்களும், 677 மாணவிகளும் என 1,552 பேர் தேர்வு எழுத வரவில்லை. பறக்கும் படையினர் கண்காணிப்பு தேர்வில் மாணவர்கள் ஆள் மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பியடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 2,686 பேரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய 115 பறக்கும் படை குழுவினரும் ஈடுபட்டனர்.

பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு போக்குவரத்து வசதிகள், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த அவசர உதவிகள் ஆகியவையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வீடூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!