ஸ்ரீமதியின் ஜிப்மர் ஆய்வறிக்கை கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு
விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களுடன் வந்திருந்த தாய் செல்வி.
மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கை நகலை கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் அவரது தாய் மனுதாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார். மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதுதொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். ஆய்வறிக்கை நகலை கேட்டு மனு இந்நிலையில் ஸ்ரீமதியின் தாய் செல்வி சார்பில் வக்கீல் காசிவிஸ்வநாதன் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மாணவி ஸ்ரீமதியின் உடல் இருமுறை நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து ஜிப்மர் மருத்துவக்குழு அளித்த ஆய்வறிக்கை நகல், ஸ்ரீமதி எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதத்தின் உண்மை தன்மையை அறிய அனுப்பப்பட்ட ஆய்வறிக்கையின் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேபோல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி வைத்துள்ள ஸ்ரீமதியின் பெரியப்பா செல்வத்தின் செல்போனை திரும்ப ஒப்படைக்கக்கோரியும் மற்றொரு மனுதாக்கல் செய்தனர். இதற்காக ஸ்ரீமதியின் தாய் செல்வி, பெரியப்பா செல்வம் ஆகியோர் நேற்று விழுப்புரம் கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.
விழுப்புரம் கோர்ட்டுக்கு வந்த வழக்கறிஞர் காசிவிஸ்வநாதன் கூறுகையில், மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரிவர நடைபெறவில்லை. எனவே சிறப்புக்குழு நியமித்து அக்குழுவில் நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்தி மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றார். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறுகையில், இவ்வழக்கின் விசாரணை ஒருதலைபட்சமாக நடந்து வருகிறது.
முழுக்க, முழுக்க சி.பி.சி.ஐ.டி., காவல்துறை, அரசு இவையெல்லாம் குற்றவாளிகளுக்கு துணைபோகிறது. உண்மைகள் கொட்டிக்கிடந்தும் உண்மையை தெரியாததுபோன்று இருக்கிறார்கள். இதுவரை நடந்த விசாரணையை வைத்து அந்த குற்றவாளிகள், ஏற்கனவே செய்த கொலைகளையும் தோண்டி எடுத்து போலீசார் கண்டுபிடித்திருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை. அப்பள்ளியை திறக்க வேண்டிய அவசியமே கிடையாது. இவ்வழக்கு விசாரணை எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. மாணவி ஸ்ரீமதி இறப்பு திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டினர்.
இதேபோன்று மாவட்டத்தில் மற்றும் மக்கள் ஸ்ரீமதியின் இறப்பு குறித்த விவரம் இன்னும் முழுமையாக தெரியாததனால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதனால் அரசு சிபிசிஐடி போலீசாரை முடித்துவிட்டு மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள உண்மைகளை கண்டு நீதிமன்றத்திற்கு உணர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu