விழுப்புரத்தில் அடிப்படை வசதி கேட்டு இருளர்கள் கோரிக்கை மனு
அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி இருளர் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,வி.நல்லாளம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளர்கள் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்,
அந்த கோரிக்கை மனுவில் நாங்கள் 7 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வி.நல்லாளம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறோம்.
குடிநீருக்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள விவசாய கிணற்றில் இறங்கி ஆபத்தான சூழலில் குடிதண்ணீர் பிடித்து வருகிறோம். மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் எங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வருகிறோம்.
மேலும் எங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, நூறுநாள் வேலைத்திட்ட அட்டை இப்படி அரசின் திட்டங்கள் ஏதும் எங்களால் பெற முடியவில்லை. நாங்கள் எந்தவொரு ஆதாரமுமின்றி இன்று வரை உள்நாட்டு அகதிகளாக வசித்து வருகிறோம்.
எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடு, மின்சார வசதி, குடிநீர் வசதி, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu