திடீர் மின் தடை, மக்கள் அவதி
விழுப்புரம் மின்பகிர்மான கோட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, காணை, கப்பூர், தெளி, பில்லுார், பிடாகம், வழுதாவூர், கோலியனுார் உட்பட 239 ஊராட்சிகளை சேர்ந்த நகரம் மற்றும் கிராம பகுதிகளுக்கு தினசரி 400 மெகா வாட் மின்சாரத்தை வீட்டு உபயோகம், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாய உபயோகத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
வழக்கமாக கோடை காலமான ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின்விசிறி, ஏர் கூலர் மற்றும் ஏ.சி., பயன்பாடு அதிகரிப்பதால், மின் தேவை அதிகரிக்கும். விழுப்புரத்தில், கடந்த ஒரு மாதமாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால், மக்கள் மின்விசிறி, ஏர்கூலர் மற்றும் ஏ.சி., உதவியுடன் வெயிலின் தாக்கத்தை தணித்து வருகின்றனர். இதனால், மின் தேவை அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப மின் வினியோகம் இல்லாததால், விழுப்புரம் மின்பகிர்மான கோட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் தடைஏற்படுகிறது. இதனால் வெய்யில் தாக்கத்தில் தவிக்கும் பொதுமக்கள் மின்வெட்டால், புழுக்கத்தில் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும், மின் தேவை அதிகரித்துள்ளதால், அதனால் ஏற்படும் மின்னழுத்தம் காரணமாக மின்மாற்றிகள் அடிக்கடி பழுதாகி வருகிறது. இவ்வாறு ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றிட விழுப்புரம் மின்பகிர்மான கோட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை பெற்றிட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu