கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கினாலும், தேர்வுகள் ஆன்-லைன் வழியாகவே நடைபெறும்; உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்-லைன் மூலமாகவா அல்லது நேரடியாகவா என்பது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக, தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இணைய வழியாக அதாவது, ஆன்-லைன் மூலமாக தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அட்டவணைகளும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றாலும், தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல, ஆன்-லைன் வழியாகவே நடைபெறும். இதில் மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் குழப்பமடையத் தேவையில்லை. ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, மற்றபடி செய்முறை தேர்வு உள்ளிட்ட வகுப்புகள் போன்றவை நேரடியாகவே நடைபெறும். இந்த ஆன்-லைன் தேர்வுகள் முறையாக நடத்தப்படும். அதனைத்தொடர்ந்து, வகுப்புகள் எப்போதும்போல நேரடியாகவே நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான இடிந்து விழும் நிலையிலான பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, பள்ளிக் கட்டடங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கல்லூரிக் கட்டடங்கள் கூட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஏதாவது இடிந்து விழும் நிலையிலான பழையக் கட்டடங்கள் இருந்தால், அதனை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கை இருந்து வருகிறது.மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடையாது என, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கூறிவருபவர்கள், வட இந்தியாவில் தென்னிந்திய மொழிகள் இதுவரை பயிற்றுவிக்கப்பட்டு உள்ளதா, குறைந்தபட்சம் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கூற வேண்டும் என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu