'புதுமைப்பெண் திட்டத்தில் யாரும் விடுபடக்கூடாது' - கலெக்டர் அறிவுறுத்தல்
கல்லூரி முதல்வர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
'புதுமைப்பெண்' திட்டத்தில், மாணவிகள் யாரும் விடுபடாத வகையில் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என, கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து, கல்லூரி முதல்வர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது,
'புதுமைப்பெண்' திட்டத்தின் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 56 கல்லூரிகளை சேர்ந்த 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிக்கும் 4,174 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டத்தில் 1.10.2022 அன்றிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் 86 கல்லூரிகளை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் முதல்கட்டத்தில் விண்ணப்பிக்க தவறிய 3,233 மாணவிகள், தற்போது விண்ணப்பித்துள்ளனர்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவிகளின் ஆதார் எண், வங்கி கணக்கில் அவர்களின் தொலைபேசி எண்ணுடன் இணைந்து உள்ளதையும், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே மாணவிகள் வங்கிக்கணக்கு வைத்திருப்பதை அனைத்து கல்லூரி முதல்வர்களும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், பதிவு செய்ய தவறிய மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் பதிவு செய்யலாம். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். எனவே, அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எவரும் இத்திட்டத்தில் விடுபடக்கூடாது. இதற்காக, அவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சரியான வழிகாட்டுதல்களை வழங்கி இத்திட்டத்தின்கீழ் மாணவிகள் பயன்பெற, கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu