திருவக்கரை கல்மர பூங்கா மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுக்க, எம்பி ரவிக்குமார் எதிர்ப்பு
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்.
விழுப்புரம் மாவட்டம்,திருவக்கரையில் உள்ள கல்மரப்பூங்காவை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது என துரை.ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் துரை.ரவிக்குமார் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது;
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிற பல்வேறு சிறப்புகளில் ஒன்று வானூர் வட்டத்திற்கு உட்பட்ட திருவக்கரையில் அமைந்துள்ள கல்மரப்பூங்கா. மரபு வளத்தை எடுத்துக்கூறுகின்ற அடையாளமாக இது இருக்கிறது. தமிழினத்தின் தொன்மையை எடுத்துரைக்கும் சான்றுகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது. இதனை மத்திய அரசு, தனது முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள சட்டமசோதாவை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்கான கருத்துக்களை மக்களிடமிருந்து கேட்டிருக்கிறார்கள். இதற்கு எனது எதிர்ப்பை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்க உள்ளேன்.
தமிழ்நாடு அரசும் தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். விழுப்புரத்தின் சிறப்புவாய்ந்த அடையாளமாக இருக்கும் கல்மரப்பூங்காவை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டால் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போய்விடும், நமது அடையாளமும் பறிபோய் விடும். இதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் சம்மதிக்கக்கூடாது.
மத்திய அரசின் பாராமுகம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13 கோவில்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மரபு சுற்றுலா தொடரை உருவாக்க வேண்டுமென தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால் தமிழ்நாடு என்றாலே மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. நான் தொடர்ந்து, இந்த கூட்டத்தொடரிலும் வலியுறுத்துவேன். தமிழ்நாடு கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என, அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu