விக்கிரவாண்டி சுங்க சாவடியை கடந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள்
சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட படையெடுத்ததால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்றன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகையை நகரவாசிகளை விட கிராமப்புற மக்களே மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். இதற்காக வேலை காரணமாக எங்கு இருந்தாலும் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனவே சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள், பொங்கலை தங்களது சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக தென் மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் முதல் கார், பஸ், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் படையெடுத்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் சிறப்பி பஸ்களும் ஆயிரத்திற்கும் மேல் இயக்கப்பட்டது. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் சுங்கச்சாவடியின் 11 வழிகளும் திறந்து விடப்பட்டு, வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாஸ்ட் டேக் இல்லாத வாகன வழிதடத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே ஒரு மணி நேரத்துக்கு மேல் சுங்கவரி செலுத்தாமல் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன. கடந்த 2 நாளில் மட்டும் சென்னை மார்க்கத்தில் இருந்து வந்த 1 லட்சத்து 5 ஆயிரம் வாகனங்கள், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளன என போக்குவரத்து துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu