3 கோவில்களை காணவில்லை: பொன். மாணிக்க வேல் அதிர்ச்சி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த மூன்று கோவில்களை காணவில்லை என ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினார்.
விழுப்புரத்திற்கு வந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் சிவன் கோவிலில் வெள்ளிக்கிழமை காலை சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 38 சோழர்கால கோவில்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதில் முதலாவதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் ஆய்வை முடித்துள்ளோம். இங்கு 3 சைவ திருத்தலங்களும், ஒரு வைணவ திருத்தலமும் இருந்துள்ளது. இவற்றில் தற்போது பக்தஜனேஸ்வரர் என்று அழைக்கப்படும் ராஜஆதித்தீஸ்வரம் சிவன் கோவில் மட்டுமே உள்ளது. 1,170 ஆண்டுகள் பழமைவாய்ந்த கலிநாரீஸ்வரம், திருமேற்றளி(வைணவம்), அகத்தீஸ்வரம் ஆகிய 3 கோவில்கள் இருந்த இடமே தெரியாமல் மாயமாகியிருப்பதை எங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளோம். இந்த கோவில்கள் சோழர் காலத்துக்கு முன்பு பல்லவர் காலத்திலேயே கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கோவில்கள் இருந்ததற்கான ஆவணங்கள் கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் ஒப்படைக்கப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையிடமும் உள்ளது. வைணவ தலமான திருமேற்றளி கோவிலில் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருமேற்றளி மகாவிஷ்ணு திருமேனியும், அதன் ஐம்பொன்சிலைகளும் திருடப்பட்டதன் விளைவாக மண்ணில் இந்த கோவில் மறைந்துவிட்டது.
அதேபோல், திருக்கோவிலூர் ஏமப்பூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் திருபுவனசுந்தரி உள்பட 2 ஐம்பொன் சிலைகள் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டுள்ளது. இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். திருநாவலூரில் இருந்த 4 கோவில்களுமே முதலாம் பராந்தகதேவரின் காலத்திலிருந்து தொடர்ந்து வழிபாட்டில் இருந்துவந்துள்ளன. அனைத்துமே ஏககாலத்தியவை. ஆனால் இன்று ராஜஆதித்தேஸ்வரம் கோவில் மட்டுமே உள்ளது. மற்ற 3 கோவில்களில் மூலவர்கள், கோவில் குளங்கள் என அடிச்சுவடுகூட இல்லாமல் மறைந்துபோய்விட்டது. திருக்கோவில்களில் புனரமைப்பு என்ற பெயரில் சரித்திர மற்றும் கலாசார பொக்கிஷங்களும், மூலவரும், உற்சவமூர்த்திகளும், கடத்தப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது.
இவற்றை கண்டுபிடித்து மீட்க முழு புலன்விசாரணை குழு அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள், லஞ்சஒழிப்புத்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற 3 காவல் கண்காணிப்பாளர் கொண்ட குழுவை ஏற்படுத்தி வழக்கை ஒப்படைத்தால் மட்டுமே சிலை திருட்டுகளை கண்டுபிடிக்க முடியும். சிலை திருட்டு தடுப்பு துறையிடம் ஒப்படைப்பது சரியாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu