விழுப்புரம் ரயில் நிலையத்தில் கஞ்சா ஆயில் கடத்தி வந்தவர் கைது

விழுப்புரம் ரயில் நிலையத்தில்  கஞ்சா ஆயில் கடத்தி வந்தவர் கைது
X

விழுப்புரம் ரயில் நிலையத்தில் கஞ்சா ஆயில் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஹவுராவிலிருந்து ரயிலில் கஞ்சா ஆயில் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் ஏட்டு வினோத்குமார், தனிப்பிரிவு ஏட்டு ரவி, போலீஸ்காரர்கள் கிருஷ்ணராஜ், சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹவுராவில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் ரெயில் என்ஜினுக்கு அடுத்தபடியாக உள்ள பொதுப்பெட்டியில் சந்தேகப்படும்படியாக இருந்த ஒருவரது உடைமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஒரு பாட்டிலில் ஒரு லிட்டர் கஞ்சா ஆயிலும், 2 பண்டல்களில் தலா ஒரு கிலோ வீதம் 2 கிலோ கஞ்சாவும் இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் கும்பிரிடாவை அடுத்த சிலிமாபோசி பகுதியை சேர்ந்த ரமேஷ்சந்திரகிரியின் மகன் ஷிஸ்ரீகுமார் கிரி (வயது 32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஷிஸ்ரீகுமார் கிரியையும் மற்றும் கஞ்சா, ஆயில் ஆகியவற்றை விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, ஷிஸ்ரீகுமார் கிரியிடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஷிஸ்ரீகுமார் கிரி, ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை ரெயிலில் கடத்திக்கொண்டு புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள நண்பர் ஒருவரிடமும், அங்கிருந்து கர்நாடகாவுக்கு சென்று மற்றொருவரிடம் கஞ்சா, கஞ்சா ஆயிலை கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஷிஸ்ரீகுமார்கிரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் பின்னணியில் வேறு சிலரும் இருக்கக்கூடும் என்பதால் அவர்கள் யார், யார் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி