விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் மது கடத்தல்
வளவனூர் அருகே மினி லாரியில் கடத்திய போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே மினி லாரியில் கடத்திய 7,440 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வாகனத்தை மரத்தில் மோதிவிட்டு தப்பி ஓடிய டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே கெங்கராம்பாளையத்தில் விழுப்புரம் -புதுச்சேரி நெடுஞ்சாலையில் மதுவிலக்கு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது, இங்கு விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கம் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தீவிர சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த மினி லாரியை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இதைக் கண்ட மினி லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்குள்ள சோதனைச்சாவடியை கடந்து வேகமாக ஓட்டிச்சென்றார்.
இதனையடுத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் அந்த மினி லாரியை துரத்தினர். குடுமியாங்குப்பம் என்ற இடத்தில் சென்றபோது அந்த மினி லாரியை அதன் டிரைவர், அங்குள்ள சாலையோர பள்ளத்தில் இறக்கி அருகில் இருந்த மரத்தில் மோதவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த மினி லாரியை சோதனை செய்ததில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இதுகுறித்து சோதனைச்சாவடி காவலர்கள், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர்கீதா மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மினி லாரியில் 155 அட்டைப்பெட்டிகளில் 7,440 போலி மதுபாட்டில்கள் இருந்தது சோதனையில் தெரியவந்தது. விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து, அதனை போலி மதுபாட்டில்களாக தயாரித்து வெளிமாநிலத்திற்கு கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது.
இதனை கடத்த முயன்றவர் யார், இந்த போலி மதுபானங்கள் எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறது என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை ஓரம் புதுச்சேரி மாநிலத்தை ஒட்டி இருக்கிறது. மேலும் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை தமிழகத்தை விட குறைவாக விற்பனை செய்யப்படுவதால் அங்கிருந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு, போலி மதுபானங்கள் தயாரிக்கும் தமிழகப் பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்
இவர்களை தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு செய்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது ஆனாலும் காவல்துறையின் கட்டுப்பாடுகளையும் மீறி தொடர்ந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் தினம் தோறும் தீவிர கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu