விழுப்புரத்தில் மாணவ மாணவிகள் பங்கேற்ற தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
தொழுநோயை வென்று சரித்திரமாக்குவோம் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியைசத்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில், தேசிய தொழுநோய் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜவனரி 30-ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் 30.01.2023 முதல் 14.02.2023 வரை இரண்டு வாரங்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் புதிய நோயாளிகளை கண்டறியும் முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் தொடக்கமாக, இன்றைய தினம், தொழுநோயை வென்று சரித்திரமாக்குவோம் என்ற குறிக்கோளினை அடிப்படையாக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தொழுநோய் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொழுநோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், உரிய மருத்துவ சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்திட முடியும். எனவே, உடலில் ஏதேனும் வெளிர்ந்த சிவந்த உணர்ச்சியற்ற தேமல் மற்றும் வெண்புள்ளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று தொழுநோய் வராமல் தடுத்திடலாம்.
இவ்வாறு மாவட்டஆட்சியர் மோகன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.மணிமேகலை, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி லாவண்யா, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.மாதுளா, துணை இயக்குநர் (காசநோய்) மரு.சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu