கழிவு நீர் கலப்பால் மாசடையும் ஏரிகள்: சுத்தப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

கழிவு நீர் கலப்பால் மாசடையும் ஏரிகள்: சுத்தப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
X

விழுப்புரம் நகரத்தை ஒட்டி மாசு அடைந்து வரும் ஏரி.

விழுப்புரம் மாவட்டத்தில் கழிவு நீர்களால் மாசடையும் ஏரிகளை சுத்தப்படுத்த விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரத்தை ஒட்டிய ஏரிகளின் நீர்நிலைகளை பாதுகாக்கும் விஷயத்தில் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதுபோல் நீர்நிலைகளில் அசுத்தம் நிறைந்த நீரை கலக்காமலும், தண்ணீரை மாசுப்படுத்தாமல் பாதுகாப்பதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்கு உண்டு. அதை பலர் உணர்ந்து செயல்படாததால் ஆங்காங்கே நீர்நிலைகளில் கழிவுநீர் கலந்து அங்கிருக்கும் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் ஏரிகளை பாதுகாக்கும் முயற்சியில் பொதுப்பணித்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அலட்சியமாக இருப்பதால் பல ஏரிகளில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்து வருகிறது. விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள 2 ஏரிகளே காட்சியும், சாட்சியும் ஆகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 506 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 780 ஏரிகளும் உள்ளன. இதில் விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வி.மருதூர் ஏரி, சாலாமேடு பொன்னேரி. இவற்றில் வி.மருதூர் ஏரியானது 114 ஏக்கர் பரப்பளவும், சாலாமேடு பொன்னேரி 140 ஏக்கர் பரப்பளவையும் கொண்டது.

மழைக்காலங்களில் இந்த ஏரிகளுக்கு வரும் தண்ணீர் மூலம் விழுப்புரம் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் மற்றும் நகரை சுற்றியுள்ள காவணிப்பாக்கம், வேலியம்பாக்கம், சாமிப்பேட்டை, கொளத்தூர், பானாம்பட்டு, பில்லூர் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு பாசன வசதிக்கும் முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளின் பாசனத்தை நம்பியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரிகளில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்து வருகிறது. ஏரிகளின் கரையோரங்களில் வசிக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மட்டுமல்லாது, நகரின் பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இந்த ஏரிகளில் கலந்து வருகிறது.

விழுப்புரத்தில் உள்ள சாராய ஆலையில் இருந்து அனுமதியின்றி வெளியேற்றப்படும் கழிவுகளும் சாலாமேடு பொன்னேரிக்கு செல்லும் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதால் அவை ஏரியில் கலந்து தண்ணீரை மாசுபட வைத்துள்ளது. இதன் காரணமாக வி.மருதூர், சாலாமேடு ஏரிகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறியுள்ளதோடு அங்கு வளர்ந்திருக்கும் மரங்கள் ஒவ்வொன்றாக அழுகி வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகள், கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் இந்த ஏரிகள் குப்பை கிடங்குகளாக மாறி விட்டது. அதனால் ஏரியில் தேங்கியிருக்கும் கழிவுநீரில் பன்றிகள், நாய்கள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன ஏனோ நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இத்தகைய ஏரிகள், குளங்கள் ஆகிய நீர் ஆதாரங்களை பாதுகாத்து பராமரிப்பதில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வி.மருதூர், சாலாமேடு பொன்னேரி உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா