பொது சிவில் சட்டத்தை நிறுத்தி வைக்க குடியரசு கட்சி வலியுறுத்தல்
இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கர் அருந்தொண்டர் விருது வழங்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லா வரவேற்றார். தொழிலாளர் அணி செயலாளர் மணிக்குமார், இளைஞரணி தலைவர் ஜெயஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் செ.கு.தமிழரசன் கலந்துகொண்டு விழுப்புரம் வி.ஆர்.பி. பள்ளியின் நிறுவனர் சோழனுக்கு பட்டியல் சமூக மாணவர்களின் கல்வி சேவைக்கு பாடுபட்டதற்காக அம்பேத்கர் விருதும், மூத்த வக்கீல்கள் தமிழ்ச்செல்வன், ரமேஷ், ராமையன், அக்ரி ஹரிகிருஷ்ணன், அக்ரி இளவரசன், ராசாராமன், விஜயரங்கன் மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மூத்த நிர்வாகிகள் என 66 பேருக்கு அம்பேத்கர் அருந்தொண்டர் விருதையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், புதுடெல்லியில் மத்திய அரசால் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும், மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும், தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கல்வி ஆண்டின் முதல் மாதத்திலேயே வழங்க வேண்டும், தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, மருத்துவ கல்லூரிகளை திராவிட மாடல் அரசு தொடங்கி நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில பொதுச்செயலாளர் பிரபு, இணை பொதுச்செயலாளர் மங்காபிள்ளை, பொருளாளர் கவுரிசங்கர், மாநில பொறுப்பாளர் அன்புவேந்தன், கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ், மாநில துணைத்தலைவர் ரமேஷ்குமார், தொழிற்சங்க பொதுச்செயலாளர் இருதயநாதன், மாவட்ட பொருளாளர் முருகன், பொறுப்பாளர் ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu