அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு வழங்க கோரி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 1ந்தேதி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தார். அதனை 1-1-2023 முதல் அவர்களுக்கு வழங்குவதற்கான உத்தரவையும் பிறப்பித்தார். ஆனால் இதில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் திருப்தி அடையாமல் மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த லூர்து சேவியர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன்தேதியிட்டு வழங்க வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக், பல்நோக்கு சுகாதாரப்பணியாளர்கள், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் சிங்காரம், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தசாமி, தமிழ்நாடு பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தண்டபாணி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் வேங்கடபதி, காந்திமதி, பாலாஜி, கோவிந்தராஜிலு, ஆதிசங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் நிதிக்காப்பாளர் சண்முகசாமி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu