திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
பைல் படம்
தமிழ்நாடு கட்டுமான கழகம் சார்பில் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உஷா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் திறன் பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில், பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால சிறப்பு திறன் பயிற்சி மற்றும் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய தொழில்களில் ஈடுபடுபவர்கள் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இப்பயிற்சியானது முதல் ஒரு மாதம் தையூரில் அமைந்துள்ள கட்டுமானக்கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாதம் காஞ்சிபுரம் நீவலூரிலும் நடைபெறும்.
இதற்கு கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் அல்லது ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி முடித்தவர்களுக்கு எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
ஒரு வார பயிற்சியானது தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். இதற்கு தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தினமும் ரூ.800 வழங்கப்படும். உணவுக்கு பிடித்தம் செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களுடைய நலவாரிய அட்டை, கல்வித்தகுதி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய நகல்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், 6/12 ஆறுமுகம் லே-அவுட், முதல் தெரு, கே.கே.சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் நேரில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu