இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
விழுப்புரம் ஆட்சியர் பழனி
விழுப்புரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் மூலமாகவும் வழங்கி வருகின்றது.
இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்தவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும்.
இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in அல்லது //https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.
விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 14.4.2023, இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம், நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம். இவ்விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரரின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu