விழுப்புரத்தில் சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரத்தில் சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம்
X

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15-ந்தேதி நடக்கவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் வருகிற 15-ந் தேதியன்று சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் விழா நடைபெறும், மைதானத்தை சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் உரிய இருக்கைகள் அமைப்பதோடு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீடுகளில் தேசியக்கொடி மேலும் விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், காவல் பாதுகாப்பு பணி, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், மைதானத்தை சுற்றி அலங்கரித்தல், பள்ளி- கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளையும் சிறப்பாக செய்ய வேண்டும்.

அரசுத்துறை அலுவலர்கள், அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்புடன் மேற்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழாவின் ஒரு சிறப்பு நிகழ்வாக இந்த ஆண்டு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளையொட்டி சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!