விழுப்புரம் அருகே வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கடல்போல் காட்சி அளிக்கும் வீடூர் அணை.
மாண்டஸ் புயல் வலுவிழந்து கரையை கடந்ததால் விழுப்புரம் மாவட்டம் தப்பியது. அதே சமயம் கடற்கரை கிராமங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன.அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது
மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பாக நேற்று முன்தினம் மாலையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பொதுமக்களின் நலன் கருதி நேற்று முன்தினம் மாலையில் இருந்து வெகுதொலைவிற்கு செல்லக்கூடிய பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயலின் வேகம் நேற்று அதிகாலை 4 மணி வரை நீடித்தது. புயல் கரையை கடந்தபோது விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. ஓவென்ற பயங்கர சத்தத்துடன் புயல் காற்று பல மணி நேரம் வீசிக்கொண்டிருந்தது. இடையிடையே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது பரவலாக மழையும் பெய்தது.
மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. வீடுகள் சேதம் மேலும் கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழுந்து ஆக்ரோஷத்துடன் கரைக்கு வந்து சென்றது. இந்த கடுமையான கடல் சீற்றம் காரணமாக கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மொத்தம் 15 வீடுகள் முழுமையாக கடல் அலைகளில் அடித்துச்சென்று விட்டது. தென்னை மரங்களும், பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து விழுந்து கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டன. தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயல் வலுவிழந்து கரையை கடந்ததால் பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விழுப்புரம் மாவட்டம் தப்பியது.
மீனவ கிராமங்களில் மட்டும் வீடுகள் சேதமடைந்தும், 13 இடங்களில் மரங்கள் முறிந்தும் பாதிப்புகள் ஏற்பட்டன. மற்ற பகுதிகளில் மிதமான மழையாக பெய்ததால் புயல் பாதிப்புகள் ஏதும் இல்லை.
இதனிடையே நேற்று காலை மழை ஓய்ந்த நிலையில், சாய்ந்து விழுந்த மரங்களை மீட்புக்குழுவினர் உடனடியாக சென்று அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். அதேபோல் பலத்த காற்றினால் அறுந்து கிடந்த மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து சீரான மின் வினியோகத்திற்கு வழிவகை செய்தனர்.
செஞ்சி, மேல்மலையனுார், பனமலைபேட்டை ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயலால் மழை பெய்தது. இதனால் தண்ணீர் வந்ததால் வீடூர் அணையின் நீர்மட்டம் 29 அடியாக(மொத்த கெள்ளளவு 32 அடி உயர்ந்தது. இதனால் வீடூர் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. வினாடிக்கு 112 கன அடிநீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தில்-38, அவலூர்பேட்டையில்-38, செஞ்சியில் -36, செம்மேட்டில்-33.40, திண்டிவனத்தில் -31, வானூரில்-28, முண்டியம்பாக்கத்தில்-22, விழுப்புரத்தில் -18,வல்லத்தில்-18, கோலியனூரில்-16, அனந்தபுரத்தில்-16, வளவனூரில்-14, கெடாரில்-12, சூரப்பட்டில்-12, திருவெண்ணெய்நல்லூரில்-11, கஞ்சனூரில்-10, அரசூரில்-10, மணம்பூண்டில்-9, நேமூரில்-8, வளத்தியில்-6, முகையூரில்-6 ஆகிய இடங்களில் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu