எம்.ஜி.எம். குழும நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு எம்.ஜி.எம். குழுமம் செயல்படுகிறது. இந்த குழுமம், ஹோட்டல்கள், சரக்கு போக்குவரத்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில், மதுபானம் தயாரிப்பு, ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூா், இந்தோனேசியா, இலங்கை, மலேசியாவிலும் இந்த குழுமத்திற்கு அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் இந்தக் குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் சென்னை மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தலைமை அலுவலகம், சாந்தோமில் உள்ள எம்.ஜி.எம். குழும உரிமையாளா் வீடு, எம்.ஜி.எம். ஏற்றுமதி, இறக்குமதி அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, மதுபான ஆலை, நட்சத்திர விடுதி, வேளாங்கண்ணியில் உள்ள ஹோட்டல்கள், பெங்களூரு என 40 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். புதன்கிழமை நள்ளிரவை தாண்டியும் சோதனை நீடித்தது.
இந்நிலையில், சோதனைகள் முழுமையடையாத நிலையில், வியாழக்கிழமை இரண்டாவது நாளாக எம்.ஜி.எம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் உள்ள மதுபான ஆலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது முக்கிய ஆவணங்களை நிறுவனத்தின் ஊழியர் வயல்வெளிகளில் வீசியதாகவும், அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும் வியாழக்கிழமை தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu