விழுப்புரத்தில், 'ஒருநாள் தலைமை ஆசிரியை' ஆன பள்ளி மாணவி

விழுப்புரத்தில், ஒருநாள் தலைமை ஆசிரியை ஆன பள்ளி மாணவி
X

பள்ளியில் ‘ஒருநாள் தலைமை ஆசிரியை’ ஆக, எச்.எம். இருக்கையில் மாணவி  லோகிதா.

School Headmaster -விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் பள்ளியில், காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பிளஸ்-2 மாணவி லோகிதா, 'ஒருநாள் தலைமை ஆசிரியை' பொறுப்பேற்று செயல்பட்டார். இது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

School Headmaster -முதல் மதிப்பெண் பெற்ற 12-ம் வகுப்பு மாணவியை 'தலைமை ஆசிரியை' இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த, தலைமை ஆசிரியை செய்த அற்புதமான செயல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியை சசிகலா. இவர் பள்ளியில் காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பள்ளியில் நடந்த இறைவணக்கத்தின்போது, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறந்த முதல் மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு பரிசு ஒன்று காத்திருக்கிறது என அறிவித்து,மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படித்து, பரிசு பெற அறிவுறுத்தினார்.


இந்நிலையில், நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவி எஸ்.லோகிதாவை, வியாழக்கிழமை பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியை இருக்கையில் அமர வைத்து, அவருக்கு கிரீடம் சூட்டி 'ஒருநாள் தலைமை ஆசிரியர்' பதவி பொறுப்பு கொடுத்து அழகுபார்த்தனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாணவி லோகிதா, ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்தார். தொடர்ந்து, பள்ளியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்று, மாணவிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்தார்.

தொடர்ந்து மதிய உணவு இடைவேளை முடிந்து, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்புகளுக்கு செல்கின்றனரா என்றும் சரிபார்த்தார். அதோடு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமை ஆசிரியராக தனக்கு கிடைத்த ஒரு நாள் வாய்ப்பை மிகவும் சரியாக செய்து முடித்த மாணவி லோகிதாவை பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.


இதுகுறித்து மாணவி லோகிதா கூறும்போது, எனக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பதவி வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தலைமை ஆசிரியரின் இந்த செயல், என்னைப்போன்ற மற்ற மாணவிகளையும் அதிக மதிப்பெண்கள் பெற உந்துதலாக அமையும். சுமாராக படிப்பவர்கள் கூட இன்னும் கூடுதல் ஆர்வம் செலுத்தி படிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது என கூறினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா கூறுகையில், மாணவிகள் கல்வியுடன், தனித்திறன்களையும், தலைமைப்பண்பையும் வளர்த்துக்கொள்வது அவசியம் என்பதற்காகவே இந்த பரிசு. இதன் மூலம் தயக்கத்துடன் உள்ள பிற மாணவிகளும் தன்னம்பிக்கையுடன் வெளியே வருவார்கள். இதேபோன்று அடுத்த வாரத்தில், காலாண்டு தேர்வில் 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கும் 'சர்ப்ரைஸ் கிப்ட்' காத்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு