விழுப்புரத்தில் விவசாயி வீட்டில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

விழுப்புரத்தில் விவசாயி வீட்டில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
X

நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவசாயியின் வீடு.

விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 61), விவசாயி. இவருடைய பேரனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அவரை பார்ப்பதற்காக கடந்த 5-ம் தேதி மாலை மோகன்குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலூருக்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேரனை பார்த்துவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மோகன்குமார் விழுப்புரம் வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலூகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

போலீஸ் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மோகன்குமார், வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings