அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை
மனித உரிமை ஆணையம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட வர்களிடம் விசாரணை நடத்தியது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை செவ்வாய்க்கிழமை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து நேரில் சந்தித்து விசாரணை நடத்தியது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த மாதம் 10ம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, குரங்குகளை வைத்து அச்சுறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 20 பேர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கண்டறியபட்டு அம்பலமானது.
அதனால் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி .போலீஸார் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம், மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்டவைகள் ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் மார்ச்.21-ந்தேதி செவ்வாய்க்கிழமை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டது
பல்வேறு குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து தற்போது விசாரணையை தொடங்கி இருக்கிறது.
இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையில், துணைக் கண்காணிப்பாளர் மோனியா உப்தல், ஆய்வாளர் சந்தோஷ்குமார், பிஜூ, ஏக்தா பாதுஷா உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர். இந்த குழுவினர் செவ்வாய்க்கிழமை குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தினரால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து, அவர்களிடம் கேட்டறிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதேபோன்று அன்பு ஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் பல்வேறு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu