உயிரிழந்த மாணவி ஸ்ரீ மதி செல்போன் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவி ஸ்ரீமதியின் செல்போன், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Sri Mathi News -கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்காக மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார், மாணவியின் பெற்றோருக்கு பலமுறை சம்மன் அனுப்பினர். இருப்பினும் அவர்கள், செல்போனை ஒப்படைக்க மறுத்து வந்தனர். இதனால் விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அப்போது, மாணவி ஸ்ரீமதியின் செல்போனை உடனே சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க வேண்டுமென அவரது பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15.12.2022 அன்று உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு வருகிற 1-ந் தேதி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி பயன்படுத்தி வந்த செல்போனை ஒப்படைக்க ஸ்ரீமதியின் தாய் செல்வி, நேற்று காலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு தனது வக்கீல்களுடன் வந்தார். அவர், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைத்தார்.
ஆனால் அந்த செல்போனை வாங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி விசாரணையில் இருப்பதால் மாணவி ஸ்ரீமதியின் செல்போனை வாங்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் உள்ளவாறு ஸ்ரீமதியின் செல்போனை சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஒப்படைத்து அதற்கான ஒப்புகை சான்றை பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி புஷ்பராணி அறிவுறுத்தினார்.
இதனையடுத்து விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சென்ற ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது மகள் பயன்படுத்தி வந்த செல்போனை, விழுப்புரம் நகர கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதியிடம் ஒப்படைத்தார். பின்னர், செல்போன் ஒப்படைக்கப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டை போலீசாரிடம் இருந்து ஸ்ரீமதியின் தாய் செல்வி பெற்றுக்கொண்டார்.
நீண்ட இழுபறிக்குப்பிறகு தற்போது மாணவி ஸ்ரீமதி பயன்படுத்தி வந்த செல்போனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றுள்ள நிலையில் ஸ்ரீமதியின் மர்ம மரண வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஸ்ரீமதியின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தினால் வழக்கு விசாரணைக்கு தேவையான பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுநாள் வரை காத்திருந்த போலீசாருக்கு தற்போது, ஸ்ரீமதியின் செல்போன் கிடைத்திருப்பதன் மூலம் இன்னும் சில நாட்களில் இவ்வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.
இதை தொடர்ந்து ஸ்ரீமதியின் தாய் செல்வி நிருபர்களிடம் கூறுகையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீது நம்பிக்கை இல்லாததால் ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்தோம். ஆனால் நீதிபதி கூறிய அறிவுரைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் செல்போனை ஒப்படைக்க உள்ளோம்.
ஸ்ரீமதி செல்போனை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி பலமுறை சம்மன்களை வழங்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இப்போது அவர்கள் கேட்ட செல்போனை நாங்கள் ஒப்படைக்கிறோம். நாங்கள் கேட்ட தகவல்களை அவர்கள் எங்களுக்கு தர வேண்டும். ஸ்ரீமதி மரணத்தில் கொலையாளிகளை யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu