விழுப்புரத்தில் இடிந்து விழும் அபாயத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள்
விழுப்புரத்தில் இடிந்து விழும் நிலையில் அரசு ஊழியர் குடியிருப்பு.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 4 பிளாக்குகளில் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடம் உள்ளது. ஆனால் இங்குள்ள குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இந்த குடியிருப்புகளை பராமரிப்பு செய்து,20 ஆண்டுகளுக்கும் மேலாவதாக அங்கு குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகளில் பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது. அதுபோல் வீடுகளில் ஜன்னல் கம்பிகளும் துருப்பிடித்த நிலையில் காட்சியளிக்கிறது. பல வீடுகளில் ஜன்னலே இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது.
மேலும் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடையாது. குறிப்பாக சாலை வசதி, குடிதண்ணீர் வசதி, வடிகால் வாய்க்கால் வசதி இப்படி எதுவுமே கிடையாது. இங்கு வசிப்பவர்கள் அனைவருமே அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என்பதால் இங்குள்ள குறைகளை யாரிடமும் தெரிவிக்க முடியாமல் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டிய வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் இருப்பதால் அங்கு குடியிருக்கும் அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சிலர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை சொந்த செலவு செய்து அவ்வப்போது மேலோட்டமாக சீரமைத்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் இங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு மழைக்காலத்தின்போது இங்குள்ள கட்டிடங்கள் மேலும், மேலும் சேதமடைவதோடு குடியிருப்புகளுக்குள் கட்டிட மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவது தொடர் கதையாக நடந்து வருவதால் அங்கு வசிப்பவர்கள் மிகவும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக விழுப்புரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிற நிலையில் வியாழக்கிழமை மாலை இங்குள்ள சி பிளாக்கின் 2-வது மாடியில் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. மழையினால் ஏற்கனவே ஊறிப்போயிருந்த நிலையில் அந்த சுவர் இடிந்து விழுந்ததால் அங்குள்ளவர்கள் மிகவும் அச்சமடைந்தனர். சுவர் இடிந்து விழுந்தபோது சிறுவர், சிறுமிகளோ, பொதுமக்களோ யாரும் அந்த இடத்தில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே துரிதமாக செயல்பட்டு இந்த அரசு ஊழியர் குடியிருப்புகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu